Archives: டிசம்பர் 2022

வலிமையாக நிரைவேற்றுதல்

இந்தியாவின் முதுமையான தடகள வீராங்கனையாக மன் கவுர் என்ற பெண் தனது 103 ஆம் வயதில், போலந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள பட்டய போட்டியில் பங்கேற்றார். வியப்பூட்டும்விதமாக ஈட்டி எறிதல், குண்டெறிதல், 60 மீட்டர் விரைவோட்டம், 200 மீட்டர் ஓட்டம் என நான்கு பிரிவுகளில், கவுர் தங்கம் வென்றார். அதிலும் ஆச்சரியமானது, தான் 2017 ஆம் ஆண்டில் ஓடினதைக் காட்டிலும் விரைவாக ஓடியிருந்தார். கவுர் ஒரு கொள்ளுப்பாட்டியாகத் தனது இரண்டாம் நூற்றாண்டில் ஓடியது, எவ்வாறு சிறப்பாக முடிக்க வேண்டுமென்பதைக் காட்டியது.

அப்போஸ்தலன் பவுலும், இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு, தன்னுடைய வாழ்வின் இறுதி நாட்களுக்குள் வந்திருப்பதை எழுதினார். "நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது." (2 தீமோத்தேயு 4:6) என்று எழுதினார். பவுல், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்" (வ.7) என்றார். தமது வியத்தகு சாதனைகளைக் கருத்தில்கொண்டோ, தான் ஏற்படுத்திய அகன்ற தாக்கத்தை எண்ணியோ (அவை ஆச்சரியமானவைதான்) அவருக்கு இத்தகைய நம்பிக்கை வரவில்லை. மாறாக, அவர் தனது விசுவாசத்தைக் காத்துக்கொண்டதை (வ.7) அறிந்திருந்தார். இந்த அப்போஸ்தலன், இயேசுவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். இன்பதுன்பங்களின் மத்தியிலும் தம்மை அழிவினின்று மீட்டவரைப் பின்பற்றினார். தனது உண்மையுள்ள வாழ்வைக் கௌரவப்படுத்தும் விதமாக, "நீதியின் கிரீடத்தோடு" (வ.8) இயேசு ஆயத்தமாய் நின்றுகொண்டிருப்பதை அறிந்திருந்தார்.

பவுல், இந்த கிரீடம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்று சொல்லாமல் , "அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." (வ.8) என்று வலியுறுத்துகிறார். ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் நாமும்கூட, தம்மை நேசிக்கும் அனைவருக்கும் கிரீடமளிக்க ஆவலாய் இயேசு நிற்பதை நினைவில்கொள்வோம். சிறப்பாக ஓட்டத்தை முடிக்க வாழ்வோம்.

அமளியினூடே கிருபை

நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் "வியத்தகு கிருபை" என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.

பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.

இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். "அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது." (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், "கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்." (வ. 28). இறுதியாக, "அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்." (வ. 30) என்று வாசிக்கிறோம்.

அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.

நான் நானாகவே

அந்த வாலிப பெண்ணால் தூங்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவள், மறுநாள் தன் சபையின் மூலமாக தன் உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறவிருந்தாள். 'ஆனால், இதற்கு நான் தகுதியற்றவள்' என்று சார்லோட் எளியோட் எண்ணினாள். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் அம்சங்களைக் குறித்துச் சந்தேகப்பட்டவள், தன்னுடைய தகுதியில் திருப்தியடையாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். மறுநாளும் மன அமைதியின்றி, இறுதியாகத் தனது மேஜைக்கு நகர்ந்து பேனாவையெடுத்து, காகிதத்தில் "நான் பாவிதான்" என்ற அரும்பெரும் பாடலின் வரிகளை எழுதினாள்.

"நான் பாவிதான், ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர். என் மீட்பரே, வந்தேன்"

1835 இல் எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகள், இயேசு எவ்வாறு தன்னுடைய சீஷர்களை தெரிந்துகொண்டு தமக்கு ஊழியம் செய்ய வைத்தார் என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஆயத்தமாய் இருந்ததாலல்ல. அவர்கள் அப்படி இருக்கவுமில்லை. அவர்கள் இருந்தவண்ணமாகவே அவர்களுக்கு அவர் அதிகாரம் அளித்ததால்தான். தகுதியற்றவர்களாலான கூட்டம், பன்னிரெண்டு பேரிருந்த குழுவில்; வரி வசூலிப்பவன், அதிகப்பிரசங்கி, கட்டுக்கடங்காத இரு சகோதரர்கள் (பார்க்கவும். மாற்கு 10:35–37), மேலும் அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து (மத்தேயு 10:4) உள்ளிட்டோர் இருந்தனர். ஆயினும், அவர் அவர்களுக்கு "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்க, குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ண, மரித்தோரை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த;" (வ. 8) அதிகாரம் கொடுத்தார். மேலும் இவற்றைச்  செய்கையில் பணம் பெற வேண்டாமென்றும்;  பயணசுமைகள், மாற்று வஸ்திரங்கள் மற்றும் பாதரட்சைகள், வழித்தடிகள் ஆகியவற்றை தவிர்க்கவும் சொன்னார் (வ. 9–10).

"நான் உங்களை அனுப்புகிறேன்" (வ.16) என்றவரே போதுமானவராயிருந்தார். இன்றைக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கு, அவர் போதுமானவர்.

நம் அனைத்து காரியங்களிலும்

1954 இல், மார்ட்டின் லூத்தர் "வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, 'மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே'. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது" என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.

அப்போஸ்தலன் பவுலும், "கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே" (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.

கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நல்ல பிரியாணி

வர்ஷாவின் உணவுக் கடையில் அதிகம் விற்பனையாகும் உணவு அவரது பிரியாணிதான். அவள் வெங்காயத்தை பொன் நிறமாக மாறும் வரை கவனமாக வறுத்தெடுப்பாள். எனவே, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், “உங்கள் பிரியாணி சுவை வித்தியாசமானது. சுவை மேம்பட்டதாக தெரியவில்லை” என்றார்.

வர்ஷாவின் புதிய உதவியாளர், இந்த முறை அதைத் தயாரித்து, அது ஏன் வித்தியாசமானது என்பதை விளக்கினார்: “வழக்கமான முறையில் நான் வெங்காயத்தை வறுக்கவில்லை, ஏனென்றால் நான் அதை வீட்டில் அவ்வாறு செய்வது வழக்கம். மிளகாய் தூளும் அதிகம் சேர்த்தேன். என் கருத்துப்படி, அது நன்றாக சுவைக்கிறது.” செய்முறை வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதை தன்னுடைய பாணியில் அவள் செய்து காண்பித்தாள்.

நான் சில சமயங்களில் தேவனுடைய ஆலோசனைகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நான் என் கருத்துக்களுக்கு உட்பட்டு என் வழியில் செல்கிறேன்.

சீரிய இராணுவத்தின் படைத்தளபதியான நாகமானும் இதேபோன்ற தவறை செய்யும் விளிம்பில் இருந்தான். தன் தொழுநோய் குணமாக யோர்தானில் தன்னைக் கழுவும்படி எலிசா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய அறிவுறுத்தலைப் பெற்றபோது, பெருமிதம் கொண்ட படைவீரன் கோபமடைந்தான். தேவனுடைய கட்டளையை விட அவனது சுயகருத்து மேலானது என்று நம்பி, தனது தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான தனது சொந்த எதிர்பார்ப்புகளை அவன் பேசினான் (2 இராஜாக்கள் 5:11-12). இருப்பினும், எலிசாவின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி அவனுடைய ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர் (வச. 13). இதன் விளைவாக, நாகமான் குணமடைந்தான்.

நாம் தேவனுடைய வழியில் விஷயங்களைச் செய்யும்போது, விவரிக்க முடியாத சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். 

.

இராஜ்ய வடிவில் பணித்தளம்

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது. இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம்.

தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.

ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள். 

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம்.